பாரியின் கதை

 

பாரியின் கதை

(புறநானூற்றில் உள்ள சில பாடல்களைத் தழுவி எழுதப்பட்ட ஒரு சிறு நாடகம்)

 

 

கதை, வசனம்: முனைவர் இர. பிரபாகரன்

ஜூலை 2011

 

தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம்

மேரிலாந்து, அமெரிக்கா

 

(2011 – ஆம் ஆண்டு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையில் வாசிங்டன் வட்டாரத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டத்தினரால் அரங்கேற்றப்பட்ட நாடகம்)


பாரியின் கதை

காட்சி – 1

 

இடம்: பறம்பு நாட்டில் உள்ள ஒரு காடு

பங்கு பெறுபவர்கள்: கபிலர், ஒரு பாணன், ஒரு விறலி (பாணனின் மனைவி)

தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்கள்: 105, 106

------------------------------------------------

கபிலர்: நீங்கள் யார்? உங்களைப் பார்த்தால் மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள் போலிருக்கிறதே! 

பாணன்: ஐயா! வணக்கம்! இங்கே பாரின்னு ஒரு வள்ளல் இருக்காரு. அவரு கிட்டே போனா நிறையா பரிசு கொடுப்பாருன்னு கேள்விப் பட்டேமுங்க. அவரைப் பாக்கத்தான் போய்க்கிட்டு இருக்கேமுங்க. 

கபிலர்: உங்கள் கையிலே யாழ் இருக்கிறது; அவர் உங்கள் மனைவி என்று நினைக்கிறேன். அவர்களைப் பார்த்தால் ஒரு விறலி போல் தோன்றுகிறதே? 

பாணன்: ஐயா! நீங்க சரியா சொல்லிட்டிங்க! நான் பாணன் தானுங்க. இவ விறலிதானுங்க. 

கபிலர்: அப்படியென்றால் மிக நல்லது. நீங்கள் சரியான இடத்திற்குத் தான் வந்திருக்கிறீர்கள். இந்த வழியாகத் தொடர்ந்து சென்றால் பாரியின் அரண்மனை வரும். பாரியை அனைவரும் எளிதில் காணலாம். அவன் உங்கள் கலைத் திறமையைப் பாராட்டித் தக்க பரிசளிப்பான். 

பாணன்: அவரு பெரிய அரசருன்னு கேள்விப் பட்டேமுங்க. அவரைப் போய் பாக்குறதுக்கு பயமா இருக்குதுங்க. 

கபிலர்: பயப்பட வேண்டியதில்லை. நீங்கள் இந்த அருவியிலிருந்து விழும் தண்ணீரைக் குடித்திருக்கிறீர்ளா? 

விறலி: ஆமாய்யா. குடிச்சோம். அது ரொம்ப இனிப்பா இருந்துதுங்க.

கபிலர்: பாரி அதைவிட இனிமையானவன். பயப்படாமல் செல்லுங்கள். உங்களுக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும். 

பாணன்: ஐயா! இன்னொரு சிக்கலுங்க. 

கபிலர்: என்ன? 

பாணன்: நாங்க தொழிலுக்குப் புதுசுங்க. எனக்கு அவ்வளவா பாட்டு வராதுங்க. ஒரே ஒரு பாட்டுதான் தெரியுங்க. அதுவும் பாதிதான் தெரியுங்க. எனக்கு குரலும் அவ்வளவு நல்லா இருக்காதுங்க. என் மனைவிக்கும் அவ்வளவா ஆடவும் தெரியாதுங்க. அவளுக்கு ஒரு காலு வேறே சரியில்லைங்க. இதுக்கு முன்னே நான் ஒரு இடத்திலே பாடினே; இவ ஆடினா. எங்களை அடிச்சு விரட்டிட்டாங்க ஐயா. 

கபிலர்: பாரி அப்படிப் பட்டவன் அல்ல. அதோ அங்கே ஒரு மரத்தடியில் ஒரு கடவுளின் சிலை இருக்கிறதே, பார்த்தீர்களா? 

விறலி: ஐயா, அந்த வழியாத்தான் வந்தேமுங்க. பார்த்தேமுங்க. 

கபிலர்: அந்த கடவுள் சிலைக்கு என்ன மாலை போட்டிருந்தது என்று பார்த்தீர்களா? 

விறலி: ஐயா! ரொம்ப வித்தியாசமா, எருக்கம் பூ மாலை போட்டிருந்துதுங்க. 

கபிலர்: அந்தக் கடவுள் அதை வேண்டாம் என்று சொல்லி கழட்டி எறிந்தாரா? இல்லையே. அதேபோல் தான் பாரியும். அவனிடத்தில் யார் சென்றாலும் அவன் அவர்களுக்கு அன்போடு பரிசளிப்பான். பயப்படாமல் செல்லுங்கள். 

பாணன், விறலி: நல்லதுங்க; நாங்க இப்பவே கிளம்புரமுங்க. 

காபிலர்: நானும் அங்கேதான் போகிறேன். நீங்கள் முதலில் செல்லுங்கள் நான் உங்களை பாரியின் அரண்மனையில் சந்திக்கிறேன்.

(பாணனும் விறலியும் கபிலரை வணங்கிச் செல்கிறார்கள்)

 


 

காட்சி – 2

இடம்: பாரியின் அரண்மனை

பங்கு பெறுபவர்கள்: பாரி, கபிலர், பாரியின் மகளிர் அங்கவை, சங்கவை, புலவர் பொய்யூர் கிழார்).

(தேரில் சென்ற பாரி குதிரையில் தன் அரண்மனைக்குத் திரும்பி வருகிறான்)

------------------------------------------------------

அங்கவை: தந்தையே! நீங்கள் மிகவும் களைப்பாக இருக்கிறீர்களே. ஏன் குதிரையில் வந்தீர்கள்? 

சங்கவை: தந்தையே! தாங்கள் தேரில் சென்றீர்களே; இப்பொழுது குதிரையில் வருகிறீர்களே! தேருக்கு என்னாயிற்று? 

பாரி: ஒன்றுமில்லை. நான் வரும் வழியில் முல்லைக் கொடி ஒன்று படர்வதற்கு கொழுகொம்பு இல்லாமல் தரையில் கிடந்தது. அதைக் கண்டவுடன் என் மனம் பொறுக்கவில்லை. தேரையே அந்தக் கொடிக்கு கொழுகொம்பாக விட்டுவிட்டுக் குதிரையில் வந்தேன். அவ்வளவுதான். 

கபிலர்: அரசே! தங்கள் கருணை உள்ளத்தை எப்படிப் புகழ்வது என்றே தெரியவில்லை. மற்ற வள்ளல்களெல்லாம் புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் தேர்களைப் பரிசாக அளிப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், தாங்கள் முல்லைக்கொடியின் நிலையைக் கண்டு மனம் கலங்கித் தேரையே கொழுகொம்பாக விட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள். கைமாறு வேண்டாத கொடைக்கு இதல்லவா சிறந்த எடுத்துக்காட்டு. பறம்பு மலைபோல் தாங்கள் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். மன்னா! நீ நீடூழி வாழ்க!  

புலவர் பொய்யூர் கிழார்: இதல்லவா உண்மையான கொடை. தங்கள் புகழை நான் ஒரு காவியமாக எழுதப் போகிறேன். ஆனால் அதை எழுதுவதற்கு சில ஆண்டுகள் ஆகும். தாங்கள் அனுமதித்தால் நான் இங்கேயே தங்கி என் காவியத்தை எழுதுவேன். 

பாரி: நான் அவ்வளவு புகழுக்குரியனல்ல. காவியம் எழுத வேண்டாம். உங்களுக்கு என் அன்பான பரிசு. (பாரி பரிசு கொடுக்கிறான்.) 

புலவர் பொய்யூர் கிழார்: பாரி வள்ளல் வாழ்க! பறம்பு மலைத் தலைவன் வாழ்க!


 

காட்சி - 3

 

இடம்: பாண்டிய மன்னனின் அரசவை

பங்கு பெறுவோர்: பாண்டிய மன்னன், அமைச்சர், புலவர் பொய்யூர் கிழார்

தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்: 107

-------------------------------------------------------------

 அமைச்சர்: மன்னா, தங்களைப் பார்க்கப் பொய்யூர் கிழார் என்று ஒரு புலவர் வந்திருக்கிறார். அவரை அரசவைக்கு வரச் சொல்லலாமா? 

பாண்டிய மன்னன்: வரச் சொல்லுங்கள். ஏதாவது பரிசுக்காகத்தான் வந்திருப்பார். அவரைப் பார்க்காவிட்டால் கண்டமாதிரி ஏதாவது கவிதை எழுதிவிடுவார். அதைப் பிற்காலத்து ஆளுங்க எல்லாம் ஆராய்ச்சி பண்ணி என் பேரைக் கெடுத்திடுவாங்க. 

புலவர் பொய்யூர் கிழார்: பாண்டிய மன்னா! உங்கள் புகழ் தமிழகம் முழுவதும் பரவி இருக்கிறது. தங்களைப் போன்ற வீரமும் ஆற்றலும் உள்ள மன்னர்கள் எங்குமே இல்லை என்று பேசிக் கொள்கிறார்கள். 

பாண்டிய மன்னன்: (பொறுமை இல்லாமல்) சரி, சரி வந்த செய்தியைக் கூறுங்கள். 

புலவர் பொய்யூர் கிழார்: மன்னா! தங்களைப் பற்றி ஒரு பெரிய காவியமே எழுதியிருக்கிறேன். அதிலே தங்கள் கொடைத் தன்மையை மிகவும் சிறப்பாக எழுதியிருக்கிறேன். 

பாண்டிய மன்னன்: என்ன? என் வெண்கொற்றக் குடையைப் பற்றி ஒரு காவியமா? 

புலவர் பொய்யூர் கிழார்: குடை இல்லை, மன்னா; கொடை.  அதாவது, தங்கள் ஈகையைப் பற்றிய காவியம். 

பாண்டிய மன்னன்: ஈயாவது; கையாவது? ஈகையா? நான் யாருக்கும் எதுவும் கொடுப்பதில்லையே! எல்லோரும் என்னை ஒரு கஞ்சன் என்றல்லவா கூறுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். 

புலவர் பொய்யூர் கிழார்: மன்னா! கவிதையிலே நான் எழுதுவதைத் தான் பிற்காலத்தில் மக்கள் நம்புவார்கள். பாரி வள்ளல் முல்லைக்குத் தேர் கொடுத்ததையும், வந்தோர்க்கெல்லாம் வாரி வாரி வழங்குவதையும் பற்றிப் பல புலவர்கள் பாடுகிறார்கள். பாரியின் கொடை, கைமாறு கருதாமல் பெய்யும் மழை போன்றது என்றெல்லாம் பாடுகிறார்கள். பிற்காலத்தில் பாரி மட்டுமே ஒரு பெரிய வள்ளல் என்று மக்கள் கருதுவார்கள். அதற்காகத்தான் இப்படி ஒரு கவிதை எழுதினேன். இந்தக் கவிதையைப் படிப்பவர்கள் தாங்களும் ஒரு பெரிய வள்ளல் என்று பேசுவார்கள். தாங்களும் தங்கள் கொடைத் தன்மைக்காக வரலாற்றில் இடம் பெறுவீர்கள். 

பாண்டிய மன்னன்: அது இருக்கட்டும். என்னமோ “முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி” என்று கூறினீர்களே, அதைப் பற்றி சற்று விவரமாகக் கூறுங்கள். 

புலவர் பொய்யூர் கிழார்: மன்னா! ஒரு நாள் பாரி காட்டிலே சென்று கொண்டிருந்த பொழுது, முல்லைக் கொடி ஒன்று படர்ந்து வளர்வதற்கு ஒரு கொழுகொம்பு இல்லாமல் தரையில் கிடந்தது. அதைக் கண்ட பாரி, மனம் கலங்கி, தன் தேரையே அந்த முல்லைக் கொடிக்குக் கொழுகொம்பாக விட்டுவிட்டுத், தன் அரன்மனைக்குக் குதிரையில் திரும்பி வந்தான். இதை கேள்விப்பட்ட புலவர்கள் எல்லோரும் பாரியை வானளாவப் புகழ்கிறார்கள். 

பாண்டிய மன்னன்: முல்லைக்குத் தேரா? அவன் முட்டாள்த் தனத்திற்கு ஒரு எல்லையே இல்லையா? ஒரு குச்சியை நட்டால் போதாதா? இந்த முட்டாள்த் தனத்தைப் புலவர்கள் புகழ்வதா? உம் போன்ற புலவர்கள் எதை வேண்டுமானாலும் புகழ்ந்து பாடுவார்கள் போலிருக்கிறதே? பிற்காலத்தில் இது போன்ற கவிதைகளைப் படிப்பவர்களுக்கு எது உண்மை எது பொய் என்று கண்டு பிடிப்பதே கடினமாகிவிடும் போலிருக்கிறதே! 

புலவர் பொய்யூர் கிழார்: மன்னா! நான் என் கவிதையை - காவியத்தைப் - படிக்கலாமா? 

பாண்டிய மன்னன்: (கோபத்தோடு) வேண்டாம்; அதை இங்கே கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். 

புலவர் பொய்யூர் கிழார்: எனக்கு ஏதாவது பரிசு….. 

பாண்டிய மன்னன்: பரிசா? நான் இன்னும் கவிதையைப் படிக்கவே இல்லையே? நீங்கள் போகலாம். 

பாண்டிய மன்னன்: அமைச்சரே! இந்தப் பாரியின் தொல்லை தாங்க முடியவில்லை. எல்லோரும் பாரி பாரி எப்பொழுதும் அவனையே புகழ்கிறார்கள். எனக்கு மிகவும் ஆத்திரமாக இருக்கிறது. இந்தப் பாரியை எப்படியாவது ”போட்டுத் தள்ள வேண்டும்”. 

அமைச்சர்: மன்னா! மன்னிக்க வேண்டும்! போட்டுத் தள்ளுவது என்றால் …. 

பாண்டிய மன்னன்: அமைச்சரே! உமக்கு எதுவுமே புரிவதில்லை. “போட்டுத் தள்ளுவது” என்றால் “அவன் கதையை முடித்துவிட வேண்டும்” என்று பொருள். 

அமைச்சர்: மன்னா! மன்னிக்கவும். “கதையை முடிப்பது என்றால்” அந்தக் கதையைப் படிக்க வேண்டாமா? நீங்கள் எந்தக் கதையைச் சொல்கிறீர்கள்? 

பாண்டிய மன்னன்: அவன் கணக்கைத் தீர்க்க வேண்டும் என்று சொல்கிறேன். 

அமைச்சர்: மன்னா! மன்னிக்கவும். கணக்கைத் தீர்ப்பதா? அதெப்படி? ஒன்றுமே புரியவில்லையே மன்னா! 

பாண்டிய மன்னன்: உமக்குச் சொல்லிப் புரியவைக்க எனக்கு நேரமில்லை. அந்தப் பாரியைக் கொலை செய்யவேண்டும் என்று சொல்கிறேன். இப்பொழுதாவது புரிந்ததா? 

அமைச்சர்: ஐயோ! கொலையா? மன்னிக்கவும்; அதெப்படி முடியும். அவனைக் கொலை செய்ய வேண்டும் என்றால் அவனோடு போருக்குப் போக வேண்டும். நாம் சென்ற முறை அவனோடு போருக்குப் போய் படு தோல்வி அடைந்து நம் படையில் பாதிக்கு மேல் இழந்துவிட்டோமே? இப்பொழுது எப்படி நாம் அவனோடு போருக்குச் செல்ல முடியும்? 

பாண்டிய மன்னன்: நான் கேள்வி கேட்டால் நீங்கள் பதிலளிக்க வேண்டும். என் கேள்விக்குப் பதில் சொல்வதற்காகவும் நான் சொல்லும் வேலையைச் செய்வதற்கும்தான் உமக்குச் சம்பளம் கொடுத்து இங்கே வேலைக்கு வைத்திருக்கிறேன். ஆகவே, அவனைக் கொலை செய்வதற்கு வழி சொல்லுங்கள். என்னைக் கேள்வி கேட்காதீர்கள். 

அமைச்சர்: (நீண்ட யோசனைக்குப் பிறகு) மன்னா! மன்னிக்கவும். 

பாண்டிய மன்னன்: எத்தனை முறை மன்னிப்பது? இப்பொழுது என்ன தவறு செய்தீர்கள்? 

அமைச்சர்: மன்னா! ஒரு யோசனை தோன்றுகிறது. தங்களைப் போலவே சோழ மன்னரும் சேர மன்னரும் பாரியிடம் தோல்வியுற்று அவன் மீது கோபமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நீங்கள் மூவரும் சேர்ந்து படையெடுத்துச் சென்றால், பாரியை நிச்சயம் வெல்லலாம். 

பாண்டிய மன்னன்: அமைச்சரே! நல்ல யோசனை! நீங்கள் உடனடியாக சோழனையும் சேரனையும் போய்ப் பார்த்து இதைபற்றிப் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வாருங்கள். 

அமைச்சர்: நான் இப்பொழுதே போகிறேன் மன்னா.


 

காட்சி – 4

 

இடம்: பாண்டிய மன்னனின் அரசவை

பங்கு பெறுவோர்: பாண்டிய மன்னன், அமைச்சர்

-------------------------------------------

 பாண்டிய மன்னன்: வாருங்கள், அமைச்சரே! போன காரியம் என்ன ஆயிற்று? 

அமைச்சர்: வெற்றி மன்னா! வெற்றி. தங்களைப் போலவே சேர மன்னரும் சோழ மன்னரும் பாரியின் மீது மிகவும் கோபமாக இருக்கிறார்கள். அவர்களும் நம்மைப் போலவே பாரியிடம் போரில் தோல்வியுற்றிருக்கிறார்கள். ஆகவே, மூவேந்தர்களும் சேர்ந்து படையெடுத்துச் சென்றால், பாரியை நிச்சயம் வெல்ல முடியும் என்று கூறினார்கள். 

பாண்டிய மன்னன்: சரி. படைத் தளபதியை போருக்குத் தயாராகச் சொல்லுங்கள். நாம் போருக்குத் தயார் என்ற செய்தியை சேர, சோழ மன்னர்களுக்கு உடனே தெரிவிக்கவும். 

அமைச்சர்: அப்படியே செய்கிறேன், மன்னா.


 

காட்சி - 5

இடம்: பாண்டிய மன்னைன் அரண்மனை.

பங்கு பெறுவோர்: சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், பாண்டியனின் அமைச்சர்

 (சேர சோழ பாண்டிய மன்னர்கள் மூவரும் கூடிப் போருக்குத் திட்டம் வகுக்கிறார்கள். கபிலர் போரைத் தடுத்து நிறுத்துவதற்காக அங்கே வருகிறார்)

தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்கள்: 108, 109, 110

------------------------------------

 

அமைச்சர்: மன்னா!  உங்கள் மூவரையும் பார்க்க வேண்டுமென்று கபிலர் வந்திருக்கிறார். 

பாண்டிய மன்னன்: யார் அவர்? 

சேர மன்னன்: அவர் மிகச் சிறந்த புலவர். புலவர்களால் பாராட்டப்பட்ட புலவர். 

பாண்டிய மன்னன்: ஏதாவது பாடல் எழுதி அதை நம்மிடம் பாடிக் காட்டிப் பரிசில் வாங்க வந்திருப்பார்? இந்தப் புலவர்களுக்கு காலம் நேரம் எதுவுமே தெரியாதா? 

சோழ மன்னன்: அவரைப் பற்றி நான் மிகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் அறிவிலும் ஒழுக்கத்திலும் மிகச் சிறந்தவர். அவர் பாரியின் அவைக்களப் புலவர். அவரைச் சந்திப்பதுதான் சரி. 

பாண்டிய மன்னன்: ஓஹோ! அவர் பாரியின் அவைக்களப் புலவரா? பாரி போருக்குப் பயந்து அவரை நம்மிடம் தூதுவராக அனுப்பியிருப்பான். சரி, சரி அவரை வரச் சொல்லுங்கள். 

கபிலர்: மன்னர்களே! உங்கள் அனைவருக்கும் என் வணக்கம். 

சோழ மன்னன்: புலவர் போற்றும் கபிலரே! வாருங்கள். வணக்கம், தாங்கள் எங்களைப் பார்க்க வந்த காரணம்? 

கபிலர்: மன்னர்களே! நீங்கள் பாரியுடன் போரிடுவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருப்பது பற்றிக் கேள்விப் பட்டேன். போராலும் வன்முறையாலும் எதையும் சாதிக்க முடியாது. நெடுங்காலமாகவே நீங்களும் உங்கள் முன்னோர்களும் போரிட்டுப் போரிட்டு தமிழகத்தில் எண்ணற்ற கொலையும், கொள்ளையும், அழிவையும் விளைவித்து தமிழ் மக்கள் தமிழால் ஒன்று படாத நிலையை உருவாக்கிவிட்டீர்கள். இனியாவது, போரிடாமல் சமாதானத்திற்கு வழி காணலாம் என்று கூறத்தான் வந்தேன். 

பாண்டிய மன்னன்: பாரியுடன் சமாதானமா? ஒருக்காலும் முடியாது. அவனை எனக்கு அடங்கி என் நாட்டில் ஒரு குறு நில மன்னனாக இருக்கச் சொன்னேன். அவன் என் சொல்லைக் கேட்க மறுத்து என்னை எதிர்த்து போர் புரிந்தானே! 

சேர மன்னன்: நான் அவன் மகள் இருவரையும் திருமணம் செய்துகொள்கிறேன் என்று கேட்டேன். அவன் என்னை அலட்சியப் படுத்திப் பெண்களைத் திருமணம் செய்விக்க மறுத்தான். மற்றும் என்னைப் போரில் ஒரு முறை தோற்கடித்தானே? அதை எப்படி நான் மன்னிக்க முடியும்? 

சோழ மன்னன்: அவன் எனக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்று கேட்டேன். அவன் கப்பம் கட்ட மறுத்து என்னோடு போர் புரிந்து என்னைப் போரில் தோற்கடித்தானே? அதற்கு என்ன பதில் சொல்லுவீர், புலவரே! 

கபிலர்: நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். இனியாவது போர் புரியாமல் இருக்கலாமே? 

பாண்டிய மன்னன்: ஏன்? நாங்கள் மூன்று மன்னர்களும் சேர்ந்திருக்கிறோம். எங்கள் கூட்டணிப் படையைக் கண்டு பாரிக்குப் பயம் வந்து விட்டதோ! அதனால்தான் உங்களைத் தூதுவராக அனுப்பினானோ? 

கபிலர்: மன்னர்களே! நீங்கள் தனித்தனியே பாரியிடம் தோல்வியை அடைந்திருக்கிறீர்கள். இப்பொழுது சேர்ந்து வந்திருக்கிறீர்கள். இருந்தாலும் உங்களால் பாரியை வெல்ல முடியாது? 

சேர மன்னன்: ஏன் முடியாது? 

கபிலர்: மன்னா! பாரியின் பறம்பு நாட்டில் இருப்பது முந்நூறு ஊர்கள். அவை அனைத்தையும் பாரி பரிசிலர்க்கு அளித்து விட்டான். பறம்பு நாட்டில் எஞ்சியிருப்பது பாரியும் நானும் தான்; ஓ! மறந்தே போய்விட்டேனே! பறம்பு மலையும் இருக்கிறது. 

சோழன்: அவ்வாறானால், நாங்கள் பறம்பு மலையை முற்றுகையிட்டு அவனை வென்று எங்களுக்கு அடிமையாக்குவோம். 

கபிலர்: நீங்கள் எத்தனை நாள் முற்றுகையிட்டாலும் என்ன செய்தாலும் பாரியை வெல்ல முடியாது? 

சோழ மன்னன்: ஏன்? 

கபிலர்: பறம்பு மலை மிகுந்த வளமுடையது. நெல்லும், கரும்பும், வள்ளிக் கிழங்கும் தேனும் அளவில்லாமல் பறம்பு மலையில் உள்ளது. ஆகவே நீங்கள் எந்தனை நாட்கள் முற்றுகையிட்டாலும், மலையில் உள்ளவர்களுக்கும் எங்கள் படை வீரர்களுக்கும் வேண்டிய உணவுப் பொருட்கள் பறம்பு மலையில் உள்ளன. எங்கள் படை வீரர்களின் வலிமையும் போர் புரியும் ஆற்றலும் உங்களுக்கு நன்கு தெரியும். நீங்கள் உங்கள் யானைகள் அனைத்தையும் கொண்டு வந்து பறம்பு மலையில் உள்ள மரங்களிலெல்லாம் கட்டினாலும், அங்குள்ள இடங்களிலெல்லாம் உங்கள் தேர்களைக் கொண்டு வந்து நிறுத்தினாலும், பாரியை உங்கள் படை வலிமையாலோ போர்த்திறத்தாலோ வெல்ல முடியாது. ஆகவே, பாரியை வெல்லுவதற்கு ஒரே ஒரு வழிதான். அதைப் பின்பற்றினால் அவனை வெல்லலாம். ஆனால், உங்களால் அவ்வாறு செய்ய முடியாது. 

பாண்டிய மன்னன்: என்ன? எங்களைப் பயமுறுத்துகிறீர்களோ? அது என்ன ஒரே வழி? 

கபிலர்: வேண்டாம் மன்னா. சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது. 

சேர மன்னன்: பரவாயில்லை; சொல்லுங்கள். 

கபிலர்: சரி. சொல்கிறேன். நீங்கள் மூவரும் பாணர்களைப் போலவும் உங்கள் மகளிர் விறலியர் போலவும் வேடம் தரித்து வந்து, ஆடலும் பாடலும் செய்தால் அவன் தன் நாட்டையும் குன்றையும் தருவான்; நீங்கள் விரும்பினால் தன்னயே வேண்டுமானாலும் தருவான். தமிழ் நாட்டின் மூவேந்தர்களாகிய நீங்கள் பாணரைப் போலவும் விறலியரைப் போலவும் வரமாட்டீர்கள். போர் செய்து வீர மரணம் அடைவதுதானே உங்கள் மரபு. மீண்டும் சொல்கிறேன். உங்களால் பாரியை வெல்ல முடியாது; போரைத் தொடங்க வேண்டாம்.


காட்சி – 6

இடம்: போர்க்களம்.

பங்கு பெறுவோர்: சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், பாண்டியனின் அமைச்சர்

சேர சோழ பாண்டிய மன்னர்களின் படை வீரர்கள் பலரும் இறந்து விட்டனர். மூவேந்தர்கள் தோல்வி அடையும் நிலையில் உள்ளனர்.

------------------------------------------------

 சோழ மன்னன்: பாண்டிய மன்னரே! உங்கள் பேச்சைக் கேட்டுப் பாரியுடன் போருக்கு வந்தோம். இப்பொழுது நமது நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. என்ன செய்யப் போகிறீர்கள்? 

பாண்டிய மன்னன்: நான் என்ன செய்ய முடியும்? 

அமைச்சர்: மன்னர்களே! புலவர் கபிலர் சொன்னதைப் போல் செய்தால் பாரியை நமது அடிமையாக ஆக்கி விடலாமே! 

சோழ மன்னன்: என்ன, விளையாடுகிறீரா அமைச்சரே? நாங்கள் பாணர்களைப் போலவும் எங்கள் மனைவியர் விறலியர் போலவும் … சே! சே! நினைத்தாலே வெட்கக் கேடு! ஒரு போதும் நடக்காது! 

பாண்டிய மன்னன்: சோழ மன்னரே! அவசரப் படாதீர்! அமைச்சர் சொல்வது சரியாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. நாம் பாணரைப் போலவும் நமது மனைவியர் விறலியர் போலவும் சென்றால், பாரி நமக்குப் பரிசளிக்க வருவான். அப்பொழுது அவனைக் கொலை செய்துவிடலாம். வாளால் செய்ய முடியாததை வஞ்சகத்தால் செய்து பாரிக்கு ஒரு முடிவு கட்டிவிடலாம். 

சோழ மன்னன்: சரி. அப்படியே செய்யலாம். 

சேர மன்னன்: (சற்று சிந்தித்த பிறகு) நல்ல திட்டம்தான். ஆனால், என் மனைவி விறலியாக வருவதற்குச் சம்மதிப்பாளா என்பதுதான் எனக்குச் சந்தேகம். அவள் சம்மதம் என்று சொன்னால்தான் நான் இதற்கு ஒத்துக்கொள்ள முடியும். 

பாண்டிய மன்னன்: சேரரே! நீங்கள் உங்கள் மனைவியிடம் சம்மதம் பெற்ற பிறகுதான் எதையும் செய்வீரோ? ஆமாம்; நீங்கள் பாரியின் மகளிர் இருவரையும் திருமணம் செய்விக்குமாறு பாரியிடம் கேட்ட பொழுது உங்கள் மனைவியின் சம்மதத்தோடுதான் பாரியிடம் பெண் கேட்டீர்களோ? 

சேர மன்னன்: அது வேறு; இது வேறு; அதற்கெல்லாம் மனைவியைச் சம்மதம் கேட்க முடியுமா? 

பாண்டிய மன்னன்: சரி; சரி; நாம் மூவரும் நமது மனைவியருடன் இன்னும் சில நாட்களில் பாரியின் பறம்பு மலைக்குச் சென்றாக வேண்டும். அமைச்சரே! அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யுங்கள்!


காட்சி – 7

இடம்: பாரியின் அரண்மனை.

பங்கு பெறுபவர்கள்: அங்கவை, சங்கவை, கபிலர்

மூவேந்தர்கள் பாணர்களைப் போலவும் அவர்களின் மனைவியர் விறலியர் போலவும் வேடம் தரித்து வந்து பாடியும் ஆடியும் பரிசு கேட்கிறார்கள். பாரி அவர்களுக்குப் பரிசளிக்க வருகிறான். பாண்டிய மன்னன், பாரியைக் கத்தியால் குத்திக் கொல்கிறான். பறம்பு மலையில் வாழும் மக்கள் இந்த செய்தியைக் கேட்டு கொதித்து எழுந்து, பாரியைக் கொன்ற பாணர்களையும் விறலியரையும் பழி வாங்க விரைந்து ஓடி வருகிறார்கள். அதற்குள், மூவேந்தர்களும் அவர்களின் மனைவியரும் தப்பி ஓடிப் போய்விடுகிறார்கள்.

 சில நாட்களுக்குப் பிறகு, அங்கவையையும் சங்கவையையும் அழைத்துக்கொண்டு கபிலர் பறம்பு நாட்டைவிட்டு வெளியேறுகிறார். அங்கவையும் சங்கவையும் “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்…” என்ற பாடலைப் பாடிகொண்டு தங்கள் தந்தையோடு வாழ்ந்த நாட்களை நினைவு கூர்ந்து, வருத்தத்தோடு கபிலருடன் நடந்து செல்கிறார்கள்.

தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்: 112

-----------------------------------------

 

அங்கவை: ஐயா! இப்பொழுது நாம் எங்கே செல்கிறோம்? 

கபிலர்: அருகில் உள்ள இரு நாடுகளில் எனக்குத் தெரிந்த குறுநில மன்னர்கள் இருவர் உள்ளனர். ஒருவன் பெயர் விச்சிக் கோ; மற்றொருவன் இருங்கோவேள். அவர்களுக்கு உங்கள் இருவரையும் மணம் முடித்த பிறகு நான் துறவறம் மேற்கொள்ளப் போகிறேன். 

சங்கவை: தாங்கள் துறவறம் மேற்கொள்ள வேண்டாம். நாங்கள் எங்கே இருக்கிறோமோ அங்கேயே நீங்களும் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நீங்கள் எங்களுக்குத் தந்தை போன்றவர். எங்கள் தந்தையை இழந்த நாங்கள் உங்களையும் இழக்க வேண்டுமா? நினைக்கவே வருத்தமாக இருக்கிறது. 

கபிலர்: சரி; அதைப் பற்றிப் பிறகு முடிவு செய்யலாம்.


 

காட்சி- 8

 

இடம்: காட்டு வழி.

பங்கு பெறுவோர்: கபிலர், அவ்வையார், அங்கவை, சங்கவை)

 விச்சிக் கோவும் இருங்கோவேளும் பாரி மகளிரை மணமுடிக்க சம்மதிக்கவில்லை. கபிலர் மிகவும் மன வருத்தத்துடன், பாரி மகளிரோடு செல்லும் வழியில் அவ்வையாரைக் காண்கிறார்.

தொடர்புடைய புறநானூற்றுப் பாடல்கள்: 200, 201,236

------------------------------------

 அங்கவை: ஐயா! நீங்கள் மிகவும் களைப்பாகவும் வருத்தத்துடனும் இருக்கிறீர்கள் போலிருக்கிறது. இங்கே சற்று இளைப்பாறிப் பிறகு செல்லலாமே! 

(மூவரும் அமர்ந்து இளைப்பாறுகிறர்கள்; அவ்வையார் அவ்வழியே வருகிறார்.) 

அவ்வையார்: ஐயா! கபிலர் அவர்களே! தாங்கள் இந்தக் காட்டு வழியில் எங்கே போகிறிர்கள்? இவர்கள் யார்? 

கபிலர்: செந்தமிழ்ப் புலமையிற் சிறந்த புலவர் பெருமாட்டி அவ்வையார் அவர்களே! இவர்கள் முல்லைக்குத் தேரீந்த வள்லல் பாரியின் மகளிர்.  அவன் என் ஆருயிர் நண்பன். மூவெந்தர்கள் அவனை வஞ்சகமாகக் கொன்றார்கள். நான் இவர்களுக்கு மணமுடிப்பதற்காக விச்சிக்கோவையும் இருங்கோவேளையும் சென்று கண்டு வந்தேன். அவர்கள் இவர்களை மணம் செய்துகொள்ள விரும்பவில்லை. இவர்களை எனக்கு நன்கு தெரிந்த அந்தணர் குடும்பத்தில் ஒப்புவித்துவிட்டு, வேறு சிலரைப் போய்ப் பார்த்துவரலாம் என்று எண்ணுகிறேன். 

அவ்வையார்: ஐயா, இவர்களை என்னிடம் விட்டுவிடுங்கள். நான் இவர்களை என் இரு கண்களைப் போல் பாதுகாப்பேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம். 

கபிலர்: உங்களிடம் இவர்களை ஒப்படைப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. தாயில்லாத இந்தப் பெண்களுக்கு நீங்கள் தாய் போல் இருந்து அவர்களை பாதுகாப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். 

அவ்வையார்: அங்கவை, சங்கவை! நீங்கள் இருவரும் என்னோடு வாருங்கள் போகலாம். ஐயா! நாங்கள் விடை பெறுகிறோம்! 

அங்கவை, சங்கவை: ஐயா! தாங்கள் விரைவில் வந்து எங்களைச் சந்திக்க வேண்டும்.

(அங்கவை, சங்கவை, அவ்வையார் ஆகியோர் செல்கிறார்கள்) 

கபிலர்: (பாரியின் இறப்பை நினைத்து வருந்துகிறார்). பாரி! என் ஆருயிர் நண்பா! என்னை நீ பல ஆண்டுகள் பாதுகாத்தாய். அக்காலமெல்லாம் நீ என் உயிருடன் கலந்த நட்பால் ஒன்றுபட்டு வாழ்ந்தாய். அவ்வாறு இருந்தும் இவ்வுலகிலிருந்து நீ பிரியும்பொழுது, என்னை உன்னோடு அழைந்துச் செல்லாமல் “இருந்து வருக” எனக் கூறிப் பிரிந்தாய். நான் உன் அன்புக்குத் தகுந்தவன் என்று நீ நினைக்க வில்லையோ? என்னைத் தவிக்க விட்டுவிட்டுச் சென்றாயே!  இவ்வுலகில், இப்பிறப்பில் நீயும் நானும் மகிழ்ந்து நட்போடு இருந்தது போல், மறு பிறவிலும் நாம் அன்போடு பழகும் நண்பர்களாக இருக்க நல்வினை துணைசெய்ய வேண்டுகிறேன். நான் விரைவில் உன்னை வந்தடைவேன். 

பாரி! இவ்வுலகம் உள்ளளவும் வாழ்க உன் புகழ்!


Comments